மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா படத்திற்கு பதில் இயக்குனர் சந்தான பாரதி படத்தை போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்கள். பாஜகவிற்கு வாக்கு கேட்டு இந்த போஸ்டர் வீட்டின் சுவர் ஒன்றில் ஒட்டப்பட்டுள்ள நிலையில், இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே இந்த போஸ்டரை பாஜகவினர் ஒட்டினார்களா? அல்லது வேறு ஏதாவது கட்சியினர் வேண்டுமென்றே ஒட்டி கலாட்டா ஏற்படுத்த வேண்டும் என்று பரப்பி உள்ளார்களா என்பது தெரியவில்லை.. பாஜகவினர் இப்படி ஒட்டவில்லை என்று திட்டவட்டமாக மறுக்கிறார்கள்..

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் இன்று தமிழகம் வந்து பிரச்சாரம் செய்கிறார்கள். மதுரை, காரைக்குடி ஆகிய இடங்களில் நடக்கும் வாகன பேரணியில் அமித்ஷா பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் மதுரை நிகழ்ச்சி நிரலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிக்கிறது.

ஏனெனில் உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று தான் (வெள்ளிக்கிழமை) தொடங்கி உள்ளது. இதனால் மிகப்பெரிய அளவில் பக்தர்கள் இன்று முதல் வருவார்கள் என்பதால், பாதுகாப்பு காரணங்களை காட்டி, மத்திய மந்திரி அமித்ஷா மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்வது தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

அதே நேரம் இன்று மாலை 6.15 மணி அளவில் அமித்ஷா பங்கேற்கும் வாகன பேரணி மதுரை நேதாஜி ரோடு தண்டாயுதபாணி முருகன் கோவிலில் இருந்து தொடங்க உள்ளது. அந்த பேரணி, ஜான்சிராணி பூங்கா, நகைக்கடை பஜார் வழியாக சென்று மதுரை ஆதீன மடம் அருகே நிறைவடைய போகிறது. செல்லும் வழியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் மதுரை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து விமானத்தில் திருவனந்தபுரத்துக்கு புறப்பட உள்ளார்.

இது ஒருபுறம் எனில், மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருவதை வரவேற்கும் விதமாக போஸ்டர்கள் மதுரையின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்று ஒட்டப்பட்டிருந்த ஒரு போஸ்டர் சமூக ஊடகங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது. மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற பெயரில் அச்சடிக்கப்பட்ட போஸ்டரில் ஏப்ரல் 12ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷாவை வரவேற்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது.

அந்த போஸ்டரில் அமித்ஷாவிற்கு பதில் இயக்குனர் சந்தான பாரதி படம் இடம் பெற்றிருந்தது. இது தான் சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது. இந்த போஸ்டரை பாஜகவினர் ஒட்டவில்லை என்றும், யாரோ வேண்டுமென்றே ஒட்டி குழப்பம் ஏற்படுத்த முயலுவதாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டுகின்றனர.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal