ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் புடவைகளை பதுக்கி வைத்த குடோனுக்கு வைத்த சீலை அகற்றக் கோரும் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சித்தோடு அருகே காலிங்கராயன்பாளையம் அண்ணா நகரில் தனியார் குடோனில் பறக்கும் படை கடந்த 21-ம் தேதி சோதனை நடத்தினர். இதில் குடோனில் 24,150 சேலைகள் 161 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதிமுக வேட்பாளர் அசோக்குமாருக்காக புடவைகள் பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆற்றல் அசோக்குமார் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சேலைகளை வாங்கி குடோனில் பதுக்கியது விசாரணையில் தெரிய வந்தது. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அசோக்குமார் மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குடோனுக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையாளர் பாக்கியலட்சுமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது; ஆற்றல் அசோக்குமார் உள்ளிட்டோர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதால் குடோனுக்கு வைத்த சீலை அகற்றக்கூடாது என அரசு தரப்பு வாதிட்டது. அரசு தரப்பு வாதத்தை ஏற்று குடோன் உரிமையாளர் பாக்கியலட்சுமி மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal