பிரதமர் மோடி இன்று மதியம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:- ‘திமுக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் நெசவாளர்களின் துன்பம் அதிகரித்தது. தமிழ்நாட்டின் திறமைகளை திமுக அரசு புறக்கணித்து வருகிறது. திமுக சுய லாபத்திற்காக தமிழ்நாட்டிற்கு அதிக தீமைகளை செய்திருக்கிறது. காங்கிரஸ் அரசு மாநில அரசுகளை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்த்தது.
பிரித்தாளும் சூழ்ச்சியை காங்கிரஸ் பின்பற்றுகிறது. அதையே திமுக தமிழகத்தில் பின்பற்றுகிறது. திமுக எப்போதும் பிரித்தாளும் கொள்கையை பின்பற்றுகிறது. திமுக அரசு நமது குழாய் மூலம் குடிநீர் திட்டத்தை திமுக-வினருக்கு மட்டும் வழங்குகிறார்கள். தமிழகத்தின் வளர்ச்சியை திமுக பார்ப்பதில்லை. திமுக, இந்தியா கூட்டணியின் கொள்கை சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவது மட்டுமே. அயோத்தி ராமர் கோவிலை திமுக எதிர்க்கிறது. சனாதன தர்மத்தை அழிப்போம் என்று மிரட்டுகிறார்கள். நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டபோது திமுக அதை எதிர்த்தது.
இன்று நாடு 5ஜி-யில் சாதனை படைக்கிறது. ஆனால் திமுக 2ஜி-யில் ஊழல் செய்தது. நான் ஊழலை ஒழியுங்கள் என்று சொல்கிறேன். அவர்கள் ஊழல்வாதிகளை காப்பாற்றுங்கள் என்கிறார்கள். திமுக அதிகார மமதையில் மூழ்கிக் கிடக்கும் கட்சி. திமுக-வின் ஆணவம் தமிழக கலாச்சாரத்திற்கு எதிரானது. திமுக தலைவர் ஒருவர் மோடி தேர்தலுக்கு பின் இந்தியாவை விட்டு ஓடிவிடுவார் எனச் சொன்னார். ஆனால் இந்த தேர்தல் இந்தியாவை எதிர்ப்பவர்களை நாட்டு விட்டு விரட்டுவதற்கான தேர்தல். குடும்ப ஆட்சி, ஊழல், போதைப்பொருட்களை நாட்டை விட்டு விரட்டுவதற்கான தேர்தல்’. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.