“மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகேதாது அணை கட்டப்படும்” என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “காவிரியின் குறுக்கே மேகேதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி கர்நாடகாவில் உள்ள பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகள் காங்கிரஸை விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் பெங்களூரு தெற்கு தொகுதியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர முடியாது. 400 இடங்களுக்கு மேலாக வெற்றி பெறுவோம் என பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களால் 250 இடங்களை தாண்ட முடியாது. மேகேதாட்டுவில் அணை கட்ட மத்திய பாஜக அரசு அனுமதி அளிக்கவில்லை. அணை கட்டாததால் பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகேதாது அணை கட்டப்படும். பெங்களூருவில் அனைவருக்கும் காவிரி நீர் கிடைக்க வழிவகை செய்யப்படும்” என்றார்.