போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகியும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இயக்குநர் அமீரை கடந்த 2ஆம் தேதி விசாரணைக்கு அழைத்த மத்திய போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர்.

இதையடுத்து டெல்லி மத்திய போதைப் பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரான அமீரிடம் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஜாபர் சாதிக், இயக்குநர் அமீரின் வீடுகள், ஓட்டல் அதிபரின் அலுவலகம் உட்பட சென்னையில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் இயக்குநர் அமீர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது. அப்போது அமீர் தரப்பில் அவகாசம் கேட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற சிறப்புத் திடல் தொழுகையி்ல் இயக்குநர் அமீர் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமீர், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தன்னிடம் 11 மணி நேரம் விசாரணை நடத்தியதும் நேற்று அமலாக்கத் துறையினர் ரெய்டு நடத்தியது உண்மைதான் என்றார். அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனை நேற்று இரவு முடிந்தது என்றும், இந்த விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் தான் தயார் என்றும் கூறினார்.

மேலும் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையின்போது என்ன எடுத்தார்கள் என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும் என்று கூறிய அமீர், வழக்கு நிலுவையில் இருக்கும்போது அதனை விமர்சிக்க முடியாது என்றும் தெரிவித்தார். அமலாக்கத் துறை விசாரணை நேர்மையாக நடைபெறுகிறது என்றும் தன் மீதான குற்றச்சாட்டுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை தன்னால் நிரூபிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜாபர் சாதிக்குடன் பயணித்தவன் என்ற முறையில் தன் மீது சந்தேக நிழல் விழுவதில் தவறில்லை என்ற அமீர், தான் எங்கும் ஓடி ஓளியவோ மறைந்து கொள்ளவோ அவசியம் ஏற்படவில்லை என்றார் மேலும் ஜாபர் சாதிக் உடன் தொடர்பில் இருந்ததாலேயே தன்னை குற்றவாளி என்று சொல்ல முடியாது என்றும் அமீர் கூறினார். இறைவன் மிகப் பெரியவன் என்பது தான் தற்போது தன்னிடம் உள்ள பதில் என்றும் எப்போதும் அதைச் சொல்லியே கடந்து செல்வேன் இப்போதும் அதை சொல்லியே கடந்து செல்கிறேன் என்றும் தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal