வேலூரில் பிரதமர் மோடியை வரவேற்க ஆள் இல்லாமல் சாலை வெறிச்சோடி காணப்பட்டதால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்தனர். மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் சென்னை வந்திருந்தார். நேற்று சென்னை தி-நகரில் உள்ள பாண்டிபஜாரில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன பேரணியில் பங்கேற்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக 2ம் நாளான இன்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் வேலூர் வந்தடைந்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட 6 பேருக்கு பிரதமர் மோடி ஆதரவு திரட்டுகிறார். இந்நிலையில், வேலூரில் பிரதமர் மோடியை வரவேற்க ஆள் இல்லாமல் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. அப்துல்லாபுரத்தில் இருந்து வேலூர் கோட்டை மைதானம் வரை சாலை மார்க்கமாக பொதுக்கூட்ட மேடைக்கு மோடி காரில் செல்கிறார். சாலையின் இருபுறமும் மக்கள் நிற்பதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடியை வரவேற்க பொதுமக்கள் யாரும் கூடாததால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
வழிநெடுகிலும் காலியாக இருந்த பகுதியை நோக்கி கையசைத்தவாறே பிரதமர் மோடி சென்றார். தேர்தல் பிரச்சாரத்திற்காக 7-வது முறையாக பிரதமர் தமிழ்நாடு வந்துள்ளார். சென்னையில் நேற்று நடந்த பிரதமரின் ரோடு ஷோவுக்கும் மக்கள் போதிய வரவேற்பு அளிக்காத நிலையில் வேலூரிலும் மோடிக்கு வரவேற்பு இல்லை. பிரதமர் மோடி வந்தபோது சாலையோரம் நடந்து சென்ற சிலரும், பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையினர் மட்டுமே இருந்தனர்.