நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் இன்னும் 8 நாட்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் ஆணையமும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 50ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணமானது கைப்பற்றப்படுகிறது. அந்த வகையில் கடந்த 10 நாட்களில் 200 கோடி ரூபாய் அளவிற்கு பணம் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கஞ்சம்பட்டி, ஊஞ்சவேலம்பட்டி, திப்பம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எம்பிஎஸ் என்ற பெயரில் கோழிப்பண்ணை வைத்தும் கோழி தீவன விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் அருள்முருகன் மற்றும் அவரது சகோதரர் சரவண முருகன். இருவரும் அதிமுக ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது.

இந்த கோழிப்பண்ணைகளின் தலைமை அலுவலகம் பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ளது. கோழிப்பண்ணைகளுக்கான அனைத்து கணக்கு வழக்குகள் இந்த அலுவலகத்தில் தான் நடைபெறுகிறது. இந்தநிலையில் நேற்று முன் தினம் இரவு திடீரென தேர்தல் அதிகாரிகளை கொண்ட பறக்கும் படையினர், வருமான வரித்துறை அதிகாரிகள் அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது கட்டுக்கட்டாக பண மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.

இந்த பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள், ஸ்டேட் பாங்கில் இருந்து கொண்டு வரப்பட்ட இயந்திரங்கள் மூலம் பணத்தை கணக்கிடப்பட்டது. இதில் 32 கோடி ரூபாய் இருப்பது தெரியவந்தது. கோழிப்பண்ணை உரிமையாளர்கள் அதிமுகவின் ஆதரவாளர்கள் என கூறப்படும் நிலையில் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கவைக்கப்பட்டதா.? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்ட பணம் இல்லையென்றும், இது தனி நபரோடு பணம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal