கோவையில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- ‘தமிழ் மொழிக்கு தேசிய அளவில் இதுவரை உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இது தமிழகத்துக்கு மத்திய அரசு செய்யும் துரோகமாகும். இந்த பிரச்சினையில் தி.மு.க.வினருக்கும், எந்த கொள்கையும் இல்லை. தமிழகத்தில் வடமாநிலத்தினரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது தமிழக நலனுக்கு ஏற்றதல்ல. இதேநிலை நீடித்தால் நாடே எதிர்பார்க்காத ஒரு புரட்சி உருவாகும்.

சின்னத்தை முடக்கினாலும் நாம் தமிழர் கட்சியை எதுவும் செய்து விட முடியாது. விசாரணை அமைப்புகளை கொண்டு என்னை மிரட்டினாலும் எங்கள் கட்சி அதை எதிர்கொள்ளும்.

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கைகளால் இந்தியாவின் பொருளாதாரமே சீர்குலைந்து விட்டதாக உலக வங்கி கருத்து தெரிவித்துள்ளது. ஆனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருவதாக மக்களை ஏமாற்றுகின்றனர். வாக்குப்பதிவு முடிந்து முடிவுகளை அறிவிப்பதற்கு 44 நாள் தாமதப்படுத்துவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

கர்நாடகத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியபோது கன்னடராக இருப்பது தனக்கு பெருமை என பேசிய அண்ணாமலை, கர்நாடகத்தில் தேர்தலில் போட்டியிடாமல் தமிழகத்தில் எதற்கு போட்டியிட வேண்டும். நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கவிட்டாலும் பரவாயில்லை. நச்சை விதைப்பவர்களுக்கு வாக்களித்து விடக்கூடாது’.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal