கோவை செட்டிப்பாளையம் பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் நாளை மறுநாள் (12-ந் தேதி) பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்று பேச உள்ளனர். பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் பிரமாண்ட பிரசார கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய பிரகடனம் செய்யப்பட உள்ளது. இந்த கூட்டத்துக்கு பிறகு பெரிய திருப்பம் ஏற்படும். சென்னையில் பிரதமரின் வாகன பிரசாரத்துக்கான விளம்பர பதாகை அகற்றப்பட்டது குறித்து கேட்கிறீர்கள். தற்போது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் அரசு உள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி தான் நடக்க வேண்டும். எங்கள் தலைவர்கள் எல்லாம் மக்களை எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி சந்திக்கின்றனர். ஆனால் பிரதமர் தமிழ்நாட்டில் ஏதாவது சாதித்து விடலாம், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி விடலாம் என ரோடு ஷோ நடத்துகிறார்.
தமிழக மக்களுக்கு இவரது உண்மை முகம் தெரியும். அதனால் தமிழக மக்கள் பிரதமரை ஆதரிக்க மாட்டார்கள். இந்தியாவிலேயே பெரிய ஊழலான தேர்தல் பத்திர ஊழல் ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் குறித்து சி.ஏ.ஜி. அறிக்கையில் குறிப்பிட்டது போன்றவை தொடர்பாக பிரதமர் பேச மறுக்கிறார். நன்கொடை பத்திர விவகாரம் குறித்து மேட்டுப்பாளையத்தில் பிரதமர் பேச வேண்டும். காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் சொல்வதை நம்பத் தேவையில்லை. அனைத்துக்கட்சி தலைவர்களுடன் இணைந்து நாங்கள் செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.