நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவிற்கு சில நாட்களே இருக்கும் நிலையில் தமிழகத்தை குறி வைத்து வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

அரசு ஒப்பந்ததாரர்கள், அமைச்சர்களுக்கு நெருக்கமான தொழில் அதிபர்கள் என குறி வைத்து வருமான வரித்துறை சோதனை நடத்தி கணக்கில் வராமல் இருக்கும் கோடிக்கணக்கான ரூபாயை எடுத்துச் செல்கின்றனர். நேற்றைய தினம் திருச்சியில் கூட அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் சோதனை நடத்தி, கோடிக்கணக்கான ரூபாயை எடுத்துச் சென்றனர். காரணம், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவே வருமான வரித்துறையின் சோதனை தொடர்வதாக தகவல்கள் வருகிறது.

இந்த நிலையில்தான் மதுரை மாவட்ட அமைச்சர் மூர்த்திக்கு தேனி மற்றும் மதுரை நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறது. மதுரையில் தி.மு.க. கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். இவருக்கு போகும் இடமெல்லாம் கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. இவரது வெற்றி வாய்ப்பு குறித்து உளவுத்துறை கொடுத்த தகவலும் தி.மு.க. தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில்தான் தி.மு.க. தலைமை அமைச்சர் மூர்த்திக்கு எப்படியாவது சு.வெங்கடேசனை வெற்றி பெற வைத்தாக வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. இதனால், மதுரை கிழக்கு உள்ளிட்ட தொகுதிகளில் விட்டமின்களை வாரியிறைத்து அதிகளவில் ஓட்டுக்களை பெற அமைச்சர் முடிவு செய்திருக்கிறார்.

அதே போல் தேனி தொகுதியிலும் தி.மு.க. சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச் செல்வனுக்கு பா.ஜ.க. கூட்டணயில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டி.டி.வி.தினகரன் கடும் நெருக்கடியை கொடுக்கிறார். ‘தங்க தமிழ்ச் செல்வன் வெற்றி பெறாவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என மூர்த்தி சவால் விட்டிருந்தார். இந்த நிலையில்தான் தேனி தொகுதியிலும் விட்டமினை இறக்க ஆயத்தமாக வருகிறாராம். இந்த நிலையில் வருமான வரித்துறை அமைச்சர் மூர்த்தி மீது ஒரு கண் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal