பாஜக உடனான கூட்டணியை முடித்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்ட போது முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்துவோம், கட்சியை உடைத்துவிடுவோம் என பாஜக மிரட்டல் விடுத்ததாக வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.

நாகை அதிமுக வேட்பாளர் சுர்ஜித்சங்கரை ஆதரித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் நாகையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவுரி திடலில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓஎஸ்.மணியன், நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து மற்றும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில் பேசிய வைகைசெல்வன் கூறுகையில், பாஜகவை அதிமுக கழற்றிவிட்டு தனித்து நிற்க முடிவு எடுத்தபோது பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பாஜக தலைமை மிரட்டியது.

பல வகைகளில் தூது அனுப்பி சமரசம் பேசினார்கள். கட்சியை இரண்டாக உடைத்துவிடுவோம் என்று சொன்னார்கள். முக்கிய நிர்வாகிகளை தூக்கி விடுவதாகவும், இடி-ரைடு அனுப்பவா? என பல வழிகளில் மிரட்டினார்கள் என்று குற்றம் சாட்டினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் வழியில் அதனை எதிர்த்து முடிவெடுத்தார். தொடர்ந்து பராதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சி தலைவர்களை கடுமையாக விமர்சித்து பேசினார்.

விருதுநகர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட ராதிகா ஆளில்லாத இடத்தில் பேசுகிறார். அவர் நடிகையாக இருந்தும் யாரும் வராததால் தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பிவிட்டார். பாரிவேந்தர் என்கிற பூரி வேந்தர், ஏசி.சண்முகம் அவரது கட்சிக்கு அவர் தலைவர் அவரது ஓட்டுநர் உறுப்பினர், தமிழக முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோரை கடுமையாக விமர்சித்தார்.

மேலும், டிடிவி தினகரன் வைத்துள்ளது கட்சி இல்லை. அது ஒரு கம்பெனி என்றும் விமர்சித்த அவர், பாஜக 10 ஆண்டுகாலம் இந்தியாவில் ஊழல் இல்லாத ஆட்சி நடத்துகிறது என்று சொல்கிற டிடிவி தினகரன் ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றவர். எங்கெல்லாம் அநீதி இருக்கிறதோ அங்கெல்லாம் நான் விஸ்வரூபம் எடுப்பேன் என்று கூறும் ஓ. பன்னீர்செல்வம் பாபநாசம் போன்ற எந்தப்படம் எடுத்தாலும் ஓடாது என்று நக்கலடித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal