பாராளுமன்ற தேர்தலையொட்டி, பொதுமக்களுக்கு பரிசு மற்றும் பணம் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை சாவடிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சோதனை மேற்கொண்டு பணம், பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். மேலும் அரசியல் கட்சி பிரமுகர்களின் கார்கள், வேட்பாளர்களின் கார்களிலும் பறக்கும் படையினர் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று பறக்கும் படை அதிகாரிகள் குன்னூரில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் சோதனை நடத்தினர். குன்னூர் வண்டிப்பேட்டையில் தி.மு.க நகர அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 3 பேர் கொண்ட பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை வந்தனர். அவர்கள் அலுவலகத்தில் உள்ள அறைகளில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் எதுவும் அங்கு சிக்கவில்லை. சில மணி நேர சோதனைக்கு பிறகு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.