மதுரையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் பண்ணை வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க நுழைந்த மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலினின் அண்ணன் முக அழகிரி. முன்னாள் மத்திய அமைச்சரான முக அழகிரி தற்போது தீவிர அரசியலில் இருந்து விலகி உள்ளார்.

முக அழகிரி குடும்பத்துடன் மதுரையில் வசித்து வருகிறார். ஒரு காலத்தில் அரசியலில் மதுரை அரசியலில் கொடிக்கட்டி பறந்த முக அழகிரி தற்போது அமைதி காத்து வருகிறார். இந்நிலையில் தான் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில் முக அழகிரியின் பண்ணை வீடு அமைந்துள்ளது. 20 ஏக்கருக்கு அதிக பரப்பளவில் தென்னை தோட்டத்துக்கு நடுவே இந்த பண்ணை வீடு அமைந்துள்ளது. இங்கு முக அழகிரி தனது குடும்பத்துடன் சென்று ஓய்வு எடுத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். மற்ற நேரங்களில் காவலாளி மற்றும் பண்ணை பணிக்கு செல்பவர்கள் மட்டுமே அங்கு இருப்பார்கள்.

இந்நிலையில் தான் இரவு நேரத்தில் முக அழகிரியின் பண்ணை வீட்டின் கதவை உடைத்து சில மர்மநபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். இதற்கிடையே தான் திடீரென்று கேட்ட சத்தத்தால் காவலாளி வீட்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

காவலாளியை பார்த்த மர்மநபர்கள் அங்கிருந்து வேகமாக வெளியேறி தலைமறைவாகி உள்ளனர். கொள்ளையடிக்கும் நோக்கத்தில் அவர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் அவர்கள் யார்? எந்த பகுதியைசேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. இதையடுத்து பண்ணை வீட்டு மேலாளர் குட்டி சார்பில் சம்பவம் தொடர்பாக காடுபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி மர்மநபர்களை தேடி வருகின்றனர். விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் திடீரென்று முக அழகிரியின் பண்ணை வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal