சென்னை தியாகராய நகரில் நாளை நடைபெறவுள்ள பிரதமர் மோடியின் தேர்தல் பிரசார ரோடு ஷோவை ஒட்டி மேற்கொள்ளப்படவுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “பாரதப் பிரதமர் அவர்கள் 09.04.2024 அன்று மாலை 6.00 மணிக்கு தி.நகர், தியாகராய சாலையில் நடைபெறும் சாலை அணிவகுப்பு கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக சென்னை வருகிறார். இந்த சாலை அணிவகுப்பு கண்காட்சியில் அரசியல் கட்சி தலைவர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
சாலை அணிவகுப்பு நடக்கும் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு. 100 அடி சாலை, அண்ணாசாலை, எஸ்.வி. படேல், காந்தி மண்டபம் சாலை மற்றும் தி.நகர் ஆகிய இடங்களில் 3.00 மணி முதல் 8.00 மணி வரை லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பிற்பகல் 13.00 மணி முதல், தியாகராய சாலையில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாகவும். தியாகராய சாலை முழுவதும், வெங்கட நாராயண சாலை, ஜி.என்.செட்டி சாலை மற்றும் வடக்கு போக் சாலை ஆகியவை சாலை அணிவகுப்பு முடியும் வரை வாகன நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.