சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் 543 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணப்படுகிறது. இந்நிலையில் முதற்கட்டமாக 39 மக்களவைத் தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் 17ம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைவதால் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மற்றொருபுறம் தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50,000 மேல் பணம் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றால் அப்பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. மேலும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் கார்களில் சோதனை நடைபெறுகிறது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு 6 பைகளில் கட்டு கட்டாக இருந்த ரூ.4 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். பணத்துடன் பிடிபட்ட புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal