திருச்சி மாவட்டம் தொட்டியம் முன்னாள் சேர்மனும், தற்போதைய அ.தி.மு.க.வின் மாவட்ட கவுன்சிலருமான தொட்டியம் ரவிச்சந்திரனை அ.தி.மு.க.விற்கு எதிரானவராக சித்தரிக்கும் உள்ளடி வேலைகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இது பற்றி முசிறி மற்றும் தொட்டியம் பகுதியில் உள்ள நடுநிலையான ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம். ‘‘சார், தொட்டியம் ரவிச்சந்திரன் மைனாரிட்டி (ரெட்டியார்) சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தனது உழைப்பால் அ.தி.மு.க.வில் தனக்கென தனி அங்கீகாரத்தைப் பெற்றவர்.

தொட்டியம் ரவிச்சந்திரனை அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டி, நீக்கிவிட வேண்டும் என ஒரு தரப்பினர் நெடுங்காலமாக போராடி வருகின்றனர். தற்போது நாடாளுமன்றத் தேர்தல் களத்தை அவர்கள் தங்களுக்கு சாகமாக பயன்படுத்திக்கொண்டனர். காரணம், அதே ரெட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார்.

அ.தி.மு.க.வில் உள்ள ஒரு தரப்பினர் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, ‘தொட்டியம் ரவிச்சந்திரன் தி.மு.க.விற்கு ஆதரவாக இருக்கிறார் என்ற பொய்யான தகவலை அ.தி.மு.க.வினர் மத்தியில் பரப்புகின்றனர். முசிறி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. இந்தக் குற்றச்சாட்டை நேரடியாகவே வைத்திருக்கிறார்.

இவர் எம்.எல்.ஏ. சீட்டு வாங்குவதற்கு காரணமாக இருந்தவர் தொட்டியம் ரவிச்சந்திரன்தான், எம்.எல்.ஏ.வாக வெற்றி பெறக் காரணமாக இருந்தவர் தொட்டியம் ரவிச்சந்திரன்தான். அப்படிப்பட்டவருக்கே இன்றைக்கு எதிராக சதிவலையை பிண்ண ஆரம்பித்துவிட்டார் எக்ஸ் எம்.எல்.ஏ.!

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் சேலம் இளங்கோவனுக்கும் கொண்டு சென்றிருக்கின்றனர். இருவரும் விசாரித்துப் பார்த்து புகாரில் உண்மையில்லை என்பதை உணர்ந்து, ‘தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துங்கள்… தேவையில்லாமல் ஒருவர் மீது ஒருவர் குற்றத்தை சுமத்தாதீர்கள்’ என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்துவிட்டனர்.

தொட்டியம் ரவிச்சந்திரனை பொறுத்தளவில் தான் இருக்கும் கட்சிக்கும், கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருக்கக்கூடியவர். அதனால்தான் பெரும்பான்மை மக்களாக முத்தரையர்கள் அதிகம் வசிக்கும் பகுதியிலும் சேர்மனாகவும், மாவட்டக் கவுன்சிலராகவும் இருக்கிறார். தொட்டியம் ரவிச்சந்திரனை அ.தி.மு.க.விற்கு எதிரானவர் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்குவதை இனியாவது நிறுத்திக்கொள்ளவேண்டும்’’ என்று எச்சரிக்கை விடுத்துச் சொன்னார்கள்.

அரசியல்னாலே உள்ளடி வேலைகளுக்கு பஞ்சமிருக்காதே..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal