ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே கெட்டி செவியூர் குறிச்சி பிரிவில் ஈரோடு – திருப்பூர் மாவட்ட எல்லையில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சோதனையின்போது திருப்பூரில் இருந்து வந்த பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தியுள்ளனர். காரை ஓரமாக நிறுத்தாமல் சாலை நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியதோடு சோதனைக்கு ஒத்துழைக்க பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மறுத்துள்ளார். தேர்தல் கண்காணிப்பு நிலைக்குழுவினரை பகிரங்கமாக மிரட்டிய திருப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் செயலுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் கண்காணிப்பு நிலைக்குழுவை சேர்ந்த அலுவலர் முருகேசனின் அடையாள அட்டையை காண்பிக்குமாறு பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மிரட்டியுள்ளார். அதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், வாழ்நாள் முழுவதும் வழக்குபோட்டு நீதிமன்றத்துக்கு அலைய விட்டுவிடுவேன் என பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் எச்சரிக்கை விடுத்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரை அடுத்து பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது குன்னத்தூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில், .திருப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் செயலுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “எனது வாகனம் தினந்தோறும் சோதிக்கப் படுகிறது…ஒவ்வொரு முறையும் வாகனத்தின் அனைத்து பகுதிகளும் முழுமையாக சோதிக்கப்படுகிறது.அதிகாரிகளின் பணி அதுவே என்று அதை மதித்து முழுமையாக ஒத்துழைப்பது நமது கடமை! அந்தக் கடமையிலிருந்து நான் தவறுவதில்லை.
ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் அதிகாரிகள் வேண்டுமென்றே செய்கிறார்கள் என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆனால் இப்படி எந்த அதிகாரியையும் மிரட்டுவது ஒருபோதும் சரி அல்ல! அதிகார போதையில் பாஜகவினர் அதிகாரிகளை மட்டுமல்ல பொதுவாக மக்களையே மதிப்பதில்லை. இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களின் நிலைமை என்ன ஆகும்? அதிகாரிகளின் நிலைமை என்னவாகும்? சிந்தியுங்கள்..!”, இவ்வாறு தெரிவித்துள்ளார்.