தமிழகம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. கருத்துக் கணிப்பில் தி.மு.க. 39 இடங்களைப் பிடிக்கும் எனக் கூறிவந்த நிலையில், வாக்குப் பதிவு நாட்கள் நெருங்க நெருங்க தேர்தல் களம் மாறிவருகிறது.

தமிழகத்தில் ஸ்டார் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் அனைத்திலுமே கடும் போட்டி நிலவுகிறது. அந்த வகையில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் என்.டி.சந்திரமோகன் போட்டியிடுகிறார். பா.ஜ.க. சார்பில் ஐ.ஜே.கே. தலைவரும், சிட்டிங் எம்.பி.யுமான பாரிவேந்தர் போட்டியிடுகிறது.

பெரம்பலூர் தொகுதியைப் பொறுத்தளவில் ஆரம்பத்தில் அருண் நேரு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கூறிவந்த நிலையில், அங்கு வசிக்கு பெரும்பான்மை சமுதாயமான முத்தரையர் வாக்குகளை பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் பாரிவேந்தர் தி.மு.க.விற்கு எதிராக திசை திருப்புவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இது பற்றி தகவல் அறிய பெரம்பலூர் தொகுதியில் வசிக்கும் முத்தரையர் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், பெரம்பலூர் தொகுதியைப் பொறுத்தளவில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கக் கூடியவர்கள் முத்தரையர் சமுதாயத்தினர்தான். ஆனால், அந்த சமுதாயத்தினர் தி.மு.க.விற்கும் வாக்களிப்பார்கள். அ.தி.மு.க.வைப் பொறுத்தளவில் மறைந்த எம்.ஜி-ஆர்., ஜெயலலிதா முதற்கொண்டு எடப்பாடியார் வரை முத்தரையர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கு சீட் கொடுப்பது வழக்கம்.

ஆனால், தி.மு.க.வைப் பொறுத்தளவில் கே.என்.நேரு யாரைக் கைகாட்டுகிறாரோ, அவர்தான் வேட்பாளர். அவரை வெற்றி பெற வைத்துவிடுவார் அமைச்சர் கே.என்.நேரு! அவருக்கு சாதி, மதமெல்லாம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால், அவருக்கு நெருக்கமாக இருப்பவர்களே முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான். இந்த நிலையில்தான் பாரிவேந்தர் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு ‘விட்டமினை’ வாரியிறைத்து, தி.மு.க.விற்கு எதிராக முத்தரையர்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதாவது, முத்தரையர் சமுதாயத்து வாக்குகளை எப்படியாவது பெற்றுவிடவேண்டும் என நினைக்கிறார் பாரிவேந்தர்.

ஏதோ, அமைச்சர் கே.என்.நேரு முத்தரையர் சமுதாயத்திற்கு எதிரானவர் போல ஒரு மாயத் தோற்றத்தை பணத்தின் மூலம் உருவாக்கப் பார்க்கிறார். ஆனால், அவரது எண்ணம் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எடுபடாது. அமைச்சர் கே.என்.நேருவைப் பற்றி முத்தரையர் சமுதாயத்தினர் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர். எனவே, முத்தரையர் வாக்குகளை திசை திருப்ப முடியாது’’ என்றனர்.

பொருத்திருந்து பார்ப்போம்… என்ன நடக்கிறது என்று..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal