விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தொகுதிக்கு உட்பட்ட அத்தியூர் திருவாதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. திமுக மூத்த அமைச்சர்களில் ஒருவரான பொன்முடியின் தீவிர ஆதரவாளரான இவர் கடந்த 1973ம் ஆண்டு முதல் திமுகவின் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.
கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி உடல் நலக்குறைவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதியில் நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அதன் பின்னர் 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுச் தேர்தலில் அதே விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இவர் உடல் நலக்குறைவு காரணமாக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே சட்டமன்ற உறுப்பினரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அவரை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து மருத்துவக் குழு விழுப்புரம் விரைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.