பா.ஜ.க வின் அடிமை கட்சியாக, ஜால்ரா கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கூறினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த ஜி.அரியூரில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து அவர் பேசியதாவது: ’பாரதிய ஜனதாவின் அடிமை கட்சியாக, ஜால்ரா கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக  இதுவரை கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. 2014ம் ஆண்டு பாஜக ஆட்சி பொறுப்பேற்ற போது 45 ரூபாயாக இருந்த பெட்ரோல் தற்போது 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது.

இதில் 50 சதவீதம் மத்திய அரசால் போடப்பட்ட வரி. இதே போல் கேஸ்  சிலிண்டரின் விலை 410 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கேஸ்  சிலிண்டருக்கு மானியத்தில் தனது பேங்க் அக்கவுன்டில் செலுத்தப்படும் என்று கூறி சில ஆண்டுகள் செலுத்திவிட்டு அதனை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர். பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து ஒவ்வொரு வருடமும் 2 கோடி பேருக்கு வேலை தருவதாக பொய்யான வாக்குறுதி கொடுத்து அதனை இன்று வரை நிறைவேற்றவில்லை.

விவசாய வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவோம், ஊழலை முற்றிலும் ஒழிப்போம் என்றும் கூறி வாக்கு சேகரித்த பாஜவினர் இன்று வரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய ஊழல்களை பாஜ அரசு செய்திருக்கிறது அதில் தேர்தல் நிதி பத்திரமும் ஒன்று. இதில், 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வாரி சுருட்டி உள்ளனர்’.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal