நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 12 மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 8ம் தேதி உடன் இந்த தேர்வுகள் நிறைவடைய உள்ளது.

இதனிடையே 4 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் இந்த மாதம் நடைபெற உள்ளது. 23ம் தேதியுடன் இந்த தேர்வுகள் நிறைவடைய உள்ளது. இதனிடையே தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வசதிக்காக வருகிற ஏப்ரல் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேதிகளில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 4 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வுகளுக்காக 22 மற்றும் 23ம் தேதிகளில் மட்டும் பள்ளிகளுக்கு வருகை தந்தால் போதுமானது என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 1 முதல் 3 வரையிலான வகுப்புகளுக்கான தேர்வுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அரசுப் பள்ளிகளுக்கு வருகிற ஏப்ரல் 13ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal