மதுரை தொகுதி தேர்தல் பணியில் சுணக்கம் காட்டினால், மாநகரை இரண்டாகப் பிரித்து புதிய மாவட்டச் செயலாளர் நியமிக்கப் படுவார், என அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி எச்சரித்துள்ளது அக்கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை தொகுதியில் சு.வெங்கடேசன் ( மார்க்சிஸ்ட் ), பா.சரவணன் ( அதிமுக ), ராம.சீனிவாசன் ( பாஜக ), சத்யாதேவி ( நாம் தமிழர் ) ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. திமுக சார்பில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்டச் செயலாளர் கோ.தளபதி ஆகியோர் தலைமையில் தேர்தல் பணி நடக்கிறது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா தலைமையில் நிர்வாகிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசன் தொண்டர்களுடன் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். சத்யாதேவி கட்சியினருடன் வாக்கு சேகரிக்கிறார். ஒவ்வொரு கட்சி வேட்பாளரின் தேர்தல் பணி, கட்சியினர் செயல்பாடு குறித்து அந்தந்த கட்சி தலைமை தீவிரமாக கண்காணித்து வருகிறது. திமுகவுக்கு வாக்குகள் குறைவாக கிடைக்கும் பகுதி பொறுப்பாளர்கள் பதவி பறிக்கப்படும் என முதல்வர் எச்சரித்துள்ளார். இதனிடையே, மதுரையில் அதிமுக தேர்தல் பணி சற்று மந்தமாக இருப்பதை அறிந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி நிர்வாகிகளை எச்சரித்துள்ளது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். ‘‘ தொடக்கத்தில் இருந்ததைவிட சு.வெங்கடேசனுக்கு பா.சரவணன் கடும் போட்டியை அளித்து வருகிறார். நகர் பகுதியில் கட்சி பணியில் சுணக்கம் காணப்படுவதாக, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு தகவல் சென்றுள்ளது. அதையடுத்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோருடன் பழனிசாமி தேர்தல் பணியை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசித்துள்ளார். அப்போது, தேர்தலில் போட்டியிட பலருக்கு வாய்ப்பு வழங்கிய போதும் யாரும் முன்வரவில்லை.

சரவணன் தேர்தல் செலவை தானே ஏற்றுக்கொண்டு போட்டியிடுவதாக ஆர்வத்துடன் முன்வந்ததால் வேட்பாளராகியுள்ளார். அவரை வெற்றி பெறச்செய்வது கட்சியினரின் கடமை. ஆனால், அவர் எம்.பி.யாகிவிட்டால் தங்களுக்கு இடையூறாக மாறிவிடுவார் என தப்புக்கணக்கு போட்டு தேர்தல் பணியில் சுணக்கம் காட்டுவதாக தகவல் வருகிறது. இது உண்மையாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியினர் மந்த செயல்பாடுகளால் சரவணன் தோற்கும் நிலை ஏற்பட்டால், மதுரை மாநகராட்சியில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளில் இரண்டை பிரித்து தனி மாவட்டமாக உருவாக்கி, சரவணனையே மாவட்டச் செயலாளராக அறிவித்து விடுவேன்.

இதைத் தவிர்க்க வேண்டுமானால், தொண்டர்களை அரவணைத்து நிர்வாகிகள் தீவிரமாகவும், விசுவாசமாகவும் களப்பணியாற்ற வேண்டும். தொடர்ந்து தொகுதியை தீவிரமாக கண்காணிப்பேன் என பொதுச் செயலாளர் கடுமையாக எச்சரித்துள்ளார். இதன் பின்னர், மாநகரில் தேர்தல் பணி சூடு பிடித்துள்ளது. மேலும், மதுரை கிழக்கு, மேலூர் தொகுதியிலும் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது தொண்டர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது எத்ததைய மாற்றத்தை ஏற்படுத்தும் என வரும் நாட்களில் தெரியும்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal