அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும்  அ.தி.மு.க. வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வனை ஆதரித்து ஊட்டியில் பிரசாரம் மேற்கொண்டார். ஊட்டி ஏ.டி.சி பஸ் நிறுத்தம் அருகே உள்ள பகுதியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

‘அ.தி.மு.க. வேட்பாளரை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். இந்த மாவட்டத்தை அதிகம் நேசித்தவர்  ஜெயலலிதா. அவர் ஊட்டிக்கு வரும் போதெல்லாம் மலைவாழ் மக்களை சந்தித்து செல்வார். நீலகிரி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை.நம்மை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க. வேட்பாளருக்கு ஓட்டு போட்டு பிரயோஜனம் இல்லை. அவர் தலைக்கணம் பிடித்தவராக பார்க்கப்படுகிறார். பெரியவர்களை மதிப்பதில்லை. நாட்டுக்காக பாடுபட்டவர்களை, மக்களை மதிப்பதில்லை.

அவர் மத்தியில் அமைச்சராக இருந்தபோது என்ன செய்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். பார்க்க முடியாத காற்றில் கூட ஊழல் செய்தவர் தான் தி.மு.க. வேட்பாளர். கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் புரிகிற கட்சி தி.மு.க. விஞ்ஞான முறையில் ஊழல் பண்ணும் கட்சியும் தி.மு.க. இவர் எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் அறிய வேண்டும். அவர் மீது போடப்பட்ட வழக்குகள் மீண்டும் வர உள்ளது. ஆகவே அவர் இங்கே இருப்பாரா எங்கே இருப்பார் என்பது விரைவில் தெரிய வரும்.

தரைப்பகுதியில் இருந்து மலைப்பகுதி வரை போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடக்கிறது. அதனை இந்த அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. தி.மு.க.வினரே போதைப்பொருளை விற்கும்போது எப்படி அதனை தடுக்க முடியும். தி.மு.க.வை சேர்ந்த பிரமுகர் ஒருவர் பல ஆயிரம் கோடி மதிப்பிலான  போதைப்பொருளை வெளிநாடுகளுக்கு கடத்தியதாக தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். இன்னும் பலர் போக உள்ளனர்.

3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டங்களையும் செய்யவில்லை. அதனால் அவர்களால் மக்களிடம் போய் பேச முடியாது. பேசுவதற்கு ஒன்றும் இல்லை. அதனால் தான் எங்கு சென்றாலும் என்னையும், அ.தி.மு.க.வையும் விமர்சித்து வருகின்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் ஏராளமான திட்டங்களை நீலகிரிக்கு கொண்டு வந்துள்ளோம். அதனால் நாங்கள் உரிமையோடு வந்து ஓட்டு கேட்கிறோம். எனவே மக்களாகிய உங்கள் ஆதரவோடு அ.தி.மு.க. ஆட்சி மலரும். ஆட்சி அமைந்ததும், ஜெயலலிதா உங்களுடன் இருந்ததை போன்று எங்கள் அரசும் ஒன்றாக இருந்து, உங்களுக்கு தேவையான அனைத்தையும் நிறைவேற்றி தருவோம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போகிற இடங்களில் எல்லாம் எடப்பாடி ஆட்சி இருண்ட ஆட்சி என்று கூறுகிறார். நீங்கள் கண்ணை மூடிக்கொண்டால் நாங்கள் என்ன செய்வது? ஊட்டிக்கு வாங்க கண்ணை திறந்து பாருங்கள் நாங்கள் கொண்டு வந்த திட்டங்கள் தெரியும்’. இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal