கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் ஏப்ரல் 12-ல் கூட்டாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தமிழகம் முழுவதும் தொடர் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரும் தமிழகம் வந்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.
இவர்களில் முதலாவதாக ராகுல் காந்தி 12-ம் தேதி தமிழகம் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியபோது, ‘‘12-ம் தேதி தமிழகம் வரும் ராகுல் காந்தி, கோவை, திருநெல்வேலியில் பிரச்சாரம் செய்ய உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. திருநெல்வேலியில் முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.
இதனிடையே, கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் கூட்டாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர் என்று திமுக அறிவித்துள்ளது. ஏப்ரல் 12ம் தேதி கோவை செட்டிபாளையம் எல்&டி பைபாஸ் ரோட்டில் வைத்து நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் பங்கேற்று இண்டியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வார்கள் என்று திமுக தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.