விருதுநகர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து, விருதுநகர் பழைய பஸ்நிலையம் அருகே, திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்தார், அப்போது அவர் பேசியதாவது: ‘வரும் நாடாளுமன்ற தேர்தல் 2வது சுதந்திர போராட்டம். இந்த தேர்தலில் நிச்சயமாக பாஜக வெற்றி பெற வாய்ப்பில்லை. ஒருவேளை அந்தக் கட்சி வெற்றி பெற்றால் இதுதான் இந்தியாவின் கடைசி தேர்தலாக இருக்கும். பிறகு சர்வாதிகாரம் மட்டுமே தலைவிரித்தாடும்.

சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்களை அமல்படுத்தி, அவர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் அல்ல என்ற நிலைக்கு தள்ளும் ஆட்சிதான் ஒன்றியத்தில் நடக்கிறது. அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்று கூறுகிறார். அவர் கர்நாடகாவில் இருந்தபோது, நான் தமிழன் இல்லை; கடைசி மூச்சு இருக்கும்வரை கன்னடியன் என்றார். அவர் ஏன் தற்போது கோவையில் நிற்கிறார்? வேண்டுமெனில் பெங்களுர், மைசூரில் நிற்கலாம். அவர் தேர்தலுக்கு பிறகு காணாமல் போய்விடுவார். பிரதமருக்கு தமிழ் மீது திடீரென பற்று வந்துவிட்டது. கவலை வேண்டாம். அவர் தேர்தலுக்கு பிறகு ஓய்வாகவே இருப்பார். அப்போது அவர் தமிழ்மொழி பயில நல்ல தமிழ் ஆசிரியரை நமது முதல்வர் அனுப்பி வைப்பார்’. இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal