மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் தேர்தல் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென அமித்ஷாவின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்றும் நாளையும் தமிழகத்தில் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டது. மதுரை பழங்காநத்தம் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் அமித்ஷா, சிவகங்கை- ராமநாதபுரத்தில் பிரசாரம் செய்வார்; இதேபோல கன்னியாகுமரியிலும் அமித்ஷா பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மதுரையில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணியும் நடந்தது. இந்த நிலையில் திடீரென அமித்ஷாவின் தமிழக பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.

இது தொடர்பாக பாஜக வட்டாரங்களில் விசாரித்த போது, அமித்ஷாவின் பிரசாரம் ரத்து செய்யப்படவில்லை; வேறு ஒரு தேதியில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றனர். அதேநேரத்தில் அமித்ஷாவின் பிரசார கூட்டம் நடைபெறும் பகுதியில் சிலர் டிரோன்களை பறக்கவிட்டு பீதியை ஏற்படுத்தி இருந்தனர். இவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த டிரோன்கள் பறக்க விட்ட சம்பவத்தால் பாதுகாப்பு கருதி அமித்ஷா பிரசாரம் ரத்து செய்யப்பட்டதா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal