ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. ஆதரவுடன் சுயேட்சையாக களமிறங்கியுள்ள ஓ.பன்னீர்செல்வம் கேட்ட சின்னம் கிடைக்காமல், கிடைத்த பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

ராமேசுவரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு பிரசாரத்தை தொடங்கிய அவர் நேற்று பரமக்குடி பகுதியில் வாக்கு சேகரித்தார். தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ள பா.ஜ.க. தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.

மீனவர்கள் அதிகம் நிறைந்துள்ள ராமநாதபுரம் தொகுதியில் களம் காணும் ஓ.பி.எஸ்.சும் தன் பங்குக்கு கச்சத்தீவை பிரதமர் மோடியுடன் இணைந்து மீட்க பாடுபடுவேன் என்று கூறி வருகிறார். இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கு தான் இந்த தேர்தலில் வெற்றி பெறுவது மிகவும் அவசியம் என்ற கருத்தையும் தொடர்ந்து பிரசாரத்தின்போது கூறிவருகிறார். இந்தநிலையில் பரமக்குடி அருகே போகலூர், துரத்தியனேந்தல், மஞ்சூர் உள்ளிட்ட கிராமங்களில் ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, தனக்கு ஒதுக்கப்பட்ட பலாப்பழம் சின்னத்தை மறந்து விட்டு, வெற்றியின் சின்னமாம் இலைக்கு வாக்களியுங்கள் என்று பேசினார். இதைக்கேட்டு அங்கு திரண்டிருந்தவர்கள் சிரித்தனர். இருந்தபோதிலும் தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் பழக்க தோஷத்தில் சொல்லி விட்டேன் என்று மழுப்பலாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இப்பகுதியில் இருக்கும் நிரந்தர குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நல்ல ஒரு பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு உங்களில் ஒருவனாக இருந்து செயல்படுவேன் என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal