திருச்சி, பெரம்பலூர், சேலம் ஆகிய நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை 3 லட்ச வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தாக வேண்டும் என உடன் பிறப்புக்களுக்கு கட்டளை பிறப்பித்ததோடு களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகிறார் அமைச்சர் கே.என்.நேரு!

அமைச்சர் கே.என்.நேருவின் தேர்தல் வியூகம் குறித்து மலைக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மூத்த உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திருச்சியில் ‘அ.தி.மு.க.வின் சோலியை முடித்த கேன்.என்.நேரு’ என்று செய்தி வெளியிட்டிருந்தீர்கள். திருச்சியில் அனைத்து ஒன்றியச் சேர்மன் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றியது. காரணம், நேருவின் கட்டளைக்கு பணிந்து உடன் பிறப்புக்கள் களத்தில் பணியாற்றியதுதான்.

திருச்சியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் துரை வைகோவிடம் திமுக நிர்வாகிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு சிறப்பாக இருக்கும் என கூறியிருக்கின்றனர். ஆனால் தங்களது சின்னத்தில் தான் போட்டியிடுவோம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என உறுதியாக தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் செத்தாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியில்லையென துரை வைகோ கூறினார். அப்போது கூட்டத்தில் அமர்ந்திருந்த திமுக கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் துரை வைகோவிற்கு தேர்தல் பணியாற்ற மாட்டோம் என உறுதியாக கூறிவிட்டனர்.

இந்த விவகாரத்தில் தி.மு.க.வினர் கடும் அதிருப்தியடைந்தனர். இந்த நிலையில்தான் ‘எனது மகன் உணர்ச்சி வசப்பட்டு பேசிவிட்டார்… தவறுதான்…’ என ஸ்டாலினிடம் வைகோ முறையிட்டிருக்கிறார். இந்தத் தகவல் அமைச்சர் கே.என்.நேருவுக்கும் வர, ‘உடனடியாக உடன்பிறப்புக்களை அழைத்த அமைச்சர், ‘நமது கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் துரை வைகோ 3 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பது நமது கடமை! இந்த வெற்றியை தலைவர் காலில் சமர்பிக்கவேண்டும்’ என உத்தரவு போட்டிருக்கிறார். அதன் பிறகு சுணங்கிக் கிடந்த உடன் பிறப்புகள் திருச்சி தொகுதியில் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகின்றனர்.

அதே போல், அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். எத்தனையோ பேரை, தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்களை எல்லாம் எம்.பி. ஆக்கி அழகு பார்த்தவர் அமைச்சர் கே.என்.நேரு! தனது மகனே வேட்பாளராக களத்தில் இறங்கியிருக்கும் போது சும்மாவா இருப்பார். பெரம்பலூர் தொகுதி முழுவதுமே திருவிழாக் கோலம் பூண்டிருக்கிறது.

எதிரணியினரைப் பற்றி துளியும் கவலை கொள்ளாமல், தொகுதி மக்களிடம் ‘உங்களுக்கு என்ன பிரச்னை என்றாலும் என்னிடம் சொல்லுங்கள் தேர்தல் முடிந்தவுடன் குடிநீர்… பாதாள சாக்களை உள்பட பல்வேறு பிரச்னை முடித்து தருகிறேன்’ என நேருவே நேரடியாக பேசி வாக்கு சேகரித்து வருகிறார்.

உடன் பிறப்புகளுக்கும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளைப் பற்றி சொல்லவா வேண்டும். அருண்நேருவுக்கு அதிக வாக்குகள் யார் வாங்கித்தருவது என்ற போட்டிதான் தொகுதி முழுவதும் ஏற்பட்டிருக்கிறது. அந்தளவிற்கு ஒன்றியச் செயலாளர்கள் களத்தில் நின்று வேலை பார்ப்பதோடு, அனைத்து தரப்பையும் குளிர்வித்து வருகிறார்கள். எனவே, பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அருண் நேரு 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.

அதே போல், சேலம் மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சராக இருக்கிறார் கே.என்.நேரு. அங்கு தி.மு.க. சார்பில் திறமையான வேட்பாளரான செல்வகணபதி போட்டியிடுகிறார். ஆனாலும், எடப்பாடியின் தொகுதி என்பதால், சேலம் தொகுதியிலும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறார் கே.என்.நேரு. அங்கும் 3 லட்சத்திற்கு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் செல்வகணபதியை வெற்றி பெற வைக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். அமைச்சரின் உத்தரவிற்கேற்ப பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal