முதல்வர் மு.க.ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் தோல்வி பயத்தில் இருக்கிறார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த பாண்டியநல்லூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரக்கோணம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.எல்.விஜயனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

பொதுக்கட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

‘‘உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் அ.தி.மு.க. அஞ்சாது. அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள் போடுவது வாடிக்கையாகிவிட்டது. எங்கள் ஆட்சியின்போது தி.மு.க. மீது வழக்கு போடவில்லை; மக்கள் பணியாற்றினோம். தி.மு.க. அரசு எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. திட்டங்களை கொண்டு வந்தால்தானே நாங்கள் குறை கூற முடியும். விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

ஸ்டாலினும் அவர் மகன் உதயநிதியும் தோல்வி பயத்தில் உள்ளனர். நான் பேசுவதில் எது பொய் என்று சொன்னால் பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன். பொய்யான விமர்சனத்துக்கு அ.தி.மு.க. தொண்டன்கூட பயப்பட மாட்டான். மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டது. கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. திமுகவின் வாரிசு அரசியலுக்கு இந்த தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்.

திமுக 3 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்காக என்ன செய்திருக்கிறது? 3 லட்சம் கோடி ரூபாய் கடன் மட்டுமே வாங்கியுள்ளது. விஞ்ஞான ரீதியாக விதவிதமான வாக்குறுதிகளைக் கூறி மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்றி இருக்கிறார்.

இந்தியாவிலேயே மக்களை சந்திக்காத ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின்தான்; பொய் பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசே வழங்கலாம். நாங்களா ஆளுங்கட்சியாக இருக்குறோம்? எதிர்க்கட்சியாக இருக்கும் எங்களால் எப்படி பாஜகவை எதிர்க்க முடியும்?’’ என பா.ஜ.க.வை எதிர்க்காததற்கும் விளக்கத்தை அளித்தார் எடப்பாடி பழனிசாமி!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal