தேர்தலின்போது எந்த கட்சிக்கும் பிரச்னை ஏற்படுத்த விரும்பவில்லை. எனவே காங்கிரசிடம் இருந்து அபராதம் வசூலிக்க எந்த ஒரு கட்டாய நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்’ என உச்சநீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கமளித்துள்ளது.
காங்கிஸ் கட்சி, 2019ல் பல நாட்கள் தாமதமாக வருமான கணக்கை தாக்கல் செய்தது. அதிலும் சில செலவு விபரங்கள் விடுபட்டு இருந்தன. அதிலிருந்து, ஏற்கனவே காங்., தாக்கல் செய்த பழைய கணக்குகளையும் வரித்துறை தூசி தட்டி எடுத்தது.
பல ஆண்டுகளாக நடந்து வந்த வருமான வரி ஏய்ப்பை கண்டுபிடித்து, மொத்தமாக வட்டியுடன் சேர்த்து அபராதமாக 1,823 கோடி ரூபாய் செலுத்தும்படி வருமான வரித்துறை சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியது. லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த நோட்டீசால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது.
வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ”தேர்தலின்போது எந்த கட்சிக்கும் பிரச்னை ஏற்படுத்த விரும்பவில்லை. காங்கிரசிடம் இருந்து அபராதம் வசூலிக்க எந்த ஒரு கட்டாய நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்” என வருமான வரித்துறை விளக்கம் அளித்தது.
இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், ‘தற்போது பாதகமான நடவடிக்கைகள் எடுக்க கூடாது’ எனக்கூறி வழக்கு விசாரணையை ஜூலைக்கு ஒத்திவைத்தது.