‘நீலகிரி தொகுதியில் எனக்கும், அதிமுக வேட்பாளரான முன்னாள் சபாநாயகர் தனபால் மகனுக்கும் தான் போட்டி. பா.ஜ.,வை நான் போட்டியாகவே நினைக்கவில்லை” என திமுக வேட்பாளர் ஆ.ராசா பேசியுள்ளார்.

நீலகிரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட அன்னூர் பகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நான் மன்மோகன்சிங், ஐ.கே.குஜ்ரால், தேவகவுடா, வாஜ்பாய் என பல பிரதமர்களை பார்த்துள்ளேன். பார்லிமென்டுக்கே வராத ஒரே பிரதமர் மோடி. சுதந்திரத்திற்கு முன் இந்தியா மொழியால், இனத்தால், கலாசாரத்தால் தனித்தனியாக இருந்தது. இந்தியா அரசியல சாசன சட்டத்தின் மூலம் தான் ஒன்றாக்கப்பட்டது.

அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரை விட சிறந்த தலைவர் ஸ்டாலின். தற்போது இந்தியாவை காக்க வேண்டிய பெரிய பொறுப்பு ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது. நீலகிரி தொகுதியில் எனக்கும், அதிமுக வேட்பாளரான முன்னாள் சபாநாயகர் தனபால் மகனுக்கும் தான் போட்டி. பா.ஜ.,வுக்கு கட்டமைப்பு இந்த தொகுதியில் கிடையாது. அவர்களை நான் போட்டியாகவே நினைக்கவில்லை.

இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் சிலிண்டர் விலை பாதியாக குறைக்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் 400 ரூபாயாக உயர்த்தப்படும். ஜாதி, மத சண்டை இல்லாத அமைதியான தொகுதி நீலகிரி தொகுதி.

இங்கு பா.ஜ.,வின் வேலைகள் பழிக்காது. மாநில உரிமைகளை பறித்ததன் வாயிலாக முதல்வர்களை ஹெட் மாஸ்டர்களாக சாதாரண நகராட்சி சேர்மன்களாக மோடி மாற்றி வருகிறார். மோடி மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியா என்கிற அமைப்பு இருக்குமா என்னும் சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது. இவ்வாறு ஆ.ராசா பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal