மதுரை கோ.புதூர் பஸ்நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: தேர்தல் வந்தால் மட்டுமே மோடிக்கு திடீர் தமிழ் பற்று வரும். புதிதாக திறக்கப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தில் சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம், ஆகியவை உள்ளது. ஆனால், தமிழ் மொழிக்கு கல்வெட்டு வைக்கவில்லை. இதற்கு பிரதமர் மோடியிடம் பதில் இல்லை.

நடிகர் திலகம் சிவாஜியையும் தாண்டி மோடி நடிக்கிறார். ஏமாந்து விடுவோம் என தப்பு கணக்கு போட்டு மக்களை ஏமாற்ற பார்க்கிறார். சிலிப்பர் செல்லாக அண்ணாமலையை நான் தான் வைத்திருக்கிறேன். நாங்கள், முருகனைப் பற்றி பேசினால், அவர்களும் முருகனைப் பற்றி பேசுவார்கள். வேல் பற்றி பேசினால், அதையும் பேசுவார்கள். இது போல் அனைத்து விஷயங்களிலும் எங்களை பின்தொடர்ந்து அவர்கள் செயல்படுகின்றனர்.

நாட்டின் வளர்ச்சி என பேசும் மோடி ஒரு குடுகுடுப்பைக்காரன் போல் செயல்படுகிறார். அவர் சொல்லும் வளர்ச்சி என்பது அம்பானி குடும்பத்திற்கும், அதானி குடும்பத்திற்கு மட்டுமே உள்ளது. அவர் கூறும் வார்த்தைகள் அனைத்தும் வெற்று வார்த்தைகள். திராவிட கட்சிகள் பங்காளிகள் தான். பாஜ தான் எங்களின் முதல் எதிரி. அவர்களை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் துரத்தி துரத்தி தோற்கடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal