டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்துவதற்காக அமலாக்கத்துறை அவருக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பியது. இதுவரை 9 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. அந்த சம்மன்கள் முறைகேடானது என கூறிய அவர், சம்மன்களை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இப்போதைக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறி வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், அவரை கைது செய்துள்ளனர்.

அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 31ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கிய டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், ஏப்ரல் 1ஆம் தேதி (இன்று) ஆஜர்ப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரை ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, டெல்லி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்படவுள்ளார். முதல்வர் பதவியில் இருந்து அவர் இன்னும் ராஜினாமா செய்யாததால், அவருக்கு சில சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என தெரிகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal