செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மூன்று முறை அதனை தள்ளுபடி செய்துவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, ஏற்கனவே உச்ச நீதிமன்ற வழங்கிய அறிவுறுத்தலின் பேரில், சாதாரண ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றமும், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தர மறுப்பு தெரிவித்து அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதன் தொடர்ச்சியாக, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தனக்கு ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல், தனக்கு எதிரான வழக்கை மூன்று மாதத்தில் விசாரித்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராகவும் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், கீழமை நீதிமன்றம் 3 மாதங்களில் விசாரணையை முடிக்க இடைக்கால தடை விதிக்கவும் மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal