தமிழ்நாட்டில் மூன்று முறை முதலமைச்சர் பதவியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், இன்று தனியாக தேர்தல் களம் காண்கிறார். ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் காரைக்குடியில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- கடந்த 2017 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பணியாற்ற நிர்பந்திக்கப்பட்டேன். அப்போது துணை முதலமைச்சர் பதவி தருவதாக கூறினார்கள். ஆனால் அந்த பதவியில் எனக்கு விருப்பமில்லை. அந்த பதவியில் எந்த அதிகாரமும் இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் வற்புறுத்தல் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் துணை முதலமைச்சர் பதவியை ஏற்று கொண்டேன்.

ஆனால் எனது அரசியல் வாழ்வை அழிக்க எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சிலர் தொடர்ந்து சதி செய்தனர். அ.தி.மு.க.வை மீட்க தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராகவே போட்டியிடுகிறேன். புதிய கட்சி தொடங்கும் எண்ணம் எதுவும் இல்லை. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்த பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமநாதபுரம் தொகுதியை பொறுத்த வரை இங்கு ஏற்கனவே பிரதமர் மோடி போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் நான் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன். எனவே பிரதமர் மோடியே போட்டியிடுவதாக நினைத்து பாரதிய ஜனதா தொண்டர்கள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். இதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்கள் என்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று கூறுகிறார்கள் ஆனால் உண்மையான ஹீரோ மோடி தான். அவரால் தான் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு  சாத்தியமாயிற்று. இவ்வாறு அவர் பேசினார்.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal