பிரதமர் நரேந்திர மோடி ஏப். 9-ம் தேதி தமிழகம் வருகிறார். அப்போது சென்னையில் ரோடு ஷோ நடத்த பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக பிரதமர் மோடி ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தமிழகம் வருகிறார்.

ஏற்கெனவே, கடந்த ஜனவரி மாதத்தில் 2 முறை தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி. 3-வது முறையாக இரண்டு நாள் பயணமாக பிப்.27-ம் தேதி தமிழகம் வந்தார். அப்போது, பல்லடத்தில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

அன்று மாலை மதுரையில் நடந்த நிகழ்ச்சியிலும், மறுநாள் தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்ற மோடி, நிறைவாக திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

அதனை தொடர்ந்து, மார்ச் 4-ம் தேதி சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். தொடர்ந்து, மார்ச் 18-ம் தேதி கோவையில் திறந்த வாகனத்தில் ரோடு ஷோவை மோடி நடத்தினார். இந்நிலையில், இந்த ஆண்டில் 6-வது முறையாக மோடி ஏப்.9-ம் தேதி தமிழகம் வர இருப்பதாக பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மோடி பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

குறிப்பாக, ஏப்.9-ல் தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னையில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன், வினோஜ்பி.செல்வம், பால் கனகராஜ் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும், அனைவருக்கும் பொதுவான இடத்தில் திறந்த வாகனத்தில் ரோடு ஷோ நடத்த இருப்பதாகவும் பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து, அதே நாளில் பல்வேறு இடங்களில் கூட்டணி கட்சியினரை ஆதரித்து பிரச்சாரத்தில் மோடி ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும், மோடியின் பயணத்திட்டங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை எனவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாள்களில் வெளியாகும் எனவும் பாஜக சார்பில் கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal