அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் சமீபகாலமாக அரசியலில் இருந்து விலகியே இருந்தார். இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வரை சந்திப்பிற்குப் பின் மீண்டும் அரசியல் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றி வருவதால் அ.தி.மு.க. வின் முக்கிய நிர்வாகிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க.வில் இறங்கி திடீரென்று களப்பணியாற்ற என்ன காரணம் என அறிவாலயம் வட்டாரத்தில் விசாரணை நடத்தினோம்.

‘‘சார், அ.தி.மு.க.வின் கோட்டையாக திகழ்ந்தது கொங்குமண்டலம். அந்த கொங்கு மண்டலத்தை அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.விற்கு வந்த செந்தில் பாலாஜி உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற பல்வேறு வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். இந்த நிலையில்தான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 7 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார் செந்தில் பாலாஜி!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாள் நெருங்கி வரும் சமயத்தில், கொங்குமண்டலமான ஈரோடு மற்றும் திருப்பூரில் உள்ள சூழ்நிலைகளை உளவுத்துறை ‘நோட்’ போட்டு முதல்வருக்கு அனுப்பியிருந்தது. அதனை பார்த்த பிறகுதான் ‘தோப்பு வெங்கடாச்சலம் ஏன் அமைதியாக இருக்கிறார்… அவரை வந்து என்னைப் பார்க்கச் சொல்லுங்கள்!’ என முதல்வர் உத்தரவைப் போட்டிருக்கிறார்.

அதாவது, திருப்பூர் பாராளுமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்புராயன் மீது தொகுதியில் அதிருப்தி நிலவுகிறது. தொகுதி பக்கமே இவர் வரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுகிறது. ‘கொரோனா காலகட்டத்தால் நான் தொகுதிக்குள் வரமுடியவில்லை’ என சுப்புராயன் காரணம் சொல்கிறார்.

இந்த நிலையில்தான், ஈரோடு மற்றும் திருப்பூரில் வேட்பாளர்கள் பிரச்சாரக் கூட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற போது, வெளியூரில் இருந்த தோப்பு வெங்கடாச்சலத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உடனடியாக முதல்வரை சந்திக்கவும் ஏற்பாடு நடந்தது.

அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘நீங்கள் களத்தில் இறங்கி தீவிரமாக களப்பணியாற்றவேண்டும் என்பதுதான் எனது விருப்பம்… உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும்…’ என உறுதி கொடுத்திருக்கிறார். அதன் பிறகுதான், தோப்பு வெங்கடாச்சலம் களத்தில் இறங்கியிருக்கிறார்.

குறிப்பாக சொல்லவேண்டுமானால் ஈரோடு அ.தி.மு.க. வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மிகவும் வசதி படைத்தவர். ஏழை எளிய மக்களுக்கு குறைந்த காசில் பசியாற்றி வருபவர் என பெயரெடுத்தவர். ஈரோட்டிலும், திருப்பூரில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்ற சூழ்நிலையில், தற்போது தோப்பு வெங்கடாச்சலம் இறங்கி களப்பணியாற்றுவது, அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு திசை மாறி வருகிறது. திருப்பூர் பாராளுமன்றத் தொகுதிக்குள் பெருந்துறை வருவது குறிப்பிடத்தக்கது.

காரணம், தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க.வில் இருக்கிற போதும், அ.தி.மு.க.வினர் மற்றும் மாற்றுக் கட்சியினருக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கிறார். எந்நேரமும் அவரை வீட்டில் சென்று மாற்றுக் கட்சியினர் கூட சந்திக்க முடிகிறது. அவர்களுக்கு தன்னாள் முடிந்த உதவிகளை தோப்பு வெங்கடாச்சலம் செய்து வருவதால், அ.தி.மு.க.வின் வாக்குகளும், அவர்களது ஆதாரவளர்களின் வாக்குகளும் தி.மு.க.விற்கும், தி.மு.க. கூட்டணிக்கும் அப்படியே மாற வாய்ப்பிருக்கிறது.

உதாரணமாக கடந்த தேர்தலில் திருப்பூர் தொகுதியில் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் 4652 என்ற மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது. காரணம் அப்போது பெருந்துறை சட்டமன்ற தொகுதியின் அ.தி.மு.க. பொறுப்பாளராக தோப்பு வெங்கடாச்சலம் செயல்பட்டார். மற்ற மாவட்டங்களில் எல்லாம் பத்தாயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. வென்றது. பெருந்துறையில் மட்டும் தி.மு.க.வால் குறைவான வாக்குகளை பெற முடிந்தது.

இதே போல் கோவை, ஈரோடு, பெருந்துறை, திருப்பூர், சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களிலும் அ.தி.மு.க. அதிக வாக்குகள் பெற்றதன் பின்னணியில் தோப்பு வெங்கடாச்சலம் இருந்தார். இதையெல்லாம் கணக்குப் போட்டுத்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு சென்ற போது தோப்பு வெங்கடாச்சலத்துடனான சந்திப்பு நடந்திருக்கிறது’’ என்றனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal