மக்களவைத் தேர்தலுக்கான தமாகா தேர்தல் அறிக்கையை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டார். பொதுச் செயலாளர்கள் விடியல் சேகர், சக்தி வடிவேல், முனவர் பாஷா, பொருளாளர் ராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அதில், மத்திய அரசுடன் இணைந்து மதுவிலக்கால் ஏற்படும் நிதி நெருக்கடியை சரி செய்து பூரண மதுவிலக்கை கொண்டுவர தமாகா பாடுபடும். போதைப் பொருட்களை முழுமையாக தடை செய்ய கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உறுதி அளிக்கும். பாலியல் குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச தண்டனையாக, மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். இதை சட்டவடிவமாக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு தமாகா துணை நிற்கும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முஸ்லிம் பெண்களின் திருமணத்துக்கு ரூ.50 ஆயிரம் மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் நவோதயா, கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகளில் கட்டாய தமிழ் பாடத்துடன் கூடிய கல்வி முறையை அமல்படுத்த பாடுபடுவோம் என்பன உள்பட 23 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal