‘மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் சிட்டிங் எம்.பி.யாக இருக்கும் சு.வெங்கடேசன் நன்றி சொல்லக் கூட வராதவர்’ என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையாக சாடியிருக்கிறார்.

நேற்றையதினம் மதுரை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுடன், அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நடிகை விந்தியா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசுகையில்: ‘‘மண்டியிட்டு வாழ்வதை விட, சண்டையிட்டு சாவது மேல் என வீரம் விளைஞ்ச மண், இந்த மதுரை மண். கடவுள் ஆண்ட பூமி இது. தேவர் அய்யா வாழ்ந்த பூமி. பாசமும் ரோஷமும் கோபமும் அன்பும் பண்பும் நிறைந்த மக்கள் இந்த மதுரை மக்கள். பொதுவாக டாக்டர் என்றால் நேரம் காலம் பார்க்காமல் இரவு பகல் பார்க்காமல் மக்கள் சேவை செய்றவங்க. நமது வேட்பாளர் டாக்டர் சரவணனும், எம்.பி.யாகி டெல்லி சென்றால், நேரம் காலம் பார்க்காமல் உங்களுக்கு சேவை செய்வார்.

பாஜகவும், திமுகவும் ஆபத்தானவர்கள். மக்களுக்கு இரண்டு பேருமே தேவை இல்லை. தேர்தல் வந்தால் போதும், மக்களை ஏமாற்றுவதற்காக திமுக நிறைய பேசுவார்கள். இஷ்டத்திற்கு தேர்தல் அறிக்கை எல்லாம் தருவார்கள். 500 ரூபாய்க்கு கேஸ் தருவதாகச் சொல்வார்கள். ஆனால் சிலிண்டரில் கேஸ் இருக்காது. 75 ரூபாய்க்கு பெட்ரோல் தருவதாகச் சொல்வார்கள். ஆனால் அரை லிட்டர் தான் தருவார்கள். 65 ரூபாய்க்கு டீசல் தருவதாகச் சொல்வார்கள். ஆனால் தகுதியான டிரைவர்ஸ்க்கு மட்டுமே தருவோம் என்பார்கள். தேர்தல் சமயத்தில் மக்களை ஏமாற்ற, திமுக என்ன வேண்டும் என்றாலும் பேசும். தேர்தலுக்கு முன்னாடி திமுக ஒரு மாதிரி பேசுவாங்க. தேர்தலுக்குப் பின்னாடி திமுக ஒரு மாதிரி பேசுவாங்க. தேர்தல் சமயத்தில் திமுக, வோட்டு மட்டும் பற்றியே கவலைப் படுவார்கள். தேர்தல் முடிஞ்ச பிறகு, அவங்க வீட்டை மட்டும் பற்றியேக் கவலைப்படுவார்கள்’’ என நடிகை விந்தியா பேசியுள்ளார்.

இதற்கிடையே இன்றைய தினம் அ.தி-.மு.க. வேட்பாளர் சரவணனை ஆதரத்துப் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ‘‘அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக களத்தில் இருக்கும் டாக்டர் சரவணன் மக்கள் நாடிப் பிடித்து வைத்தியம் பார்ப்பவர். மக்கள் பிரச்னைகளுக்கு ஓடோடி வந்து முதல் ஆளாக நிற்பார்.

ஆனால், தற்போது சிட்டிங் எம்.பி.யாக இருக்கும் சு.வெங்கடேசன், வெற்றி பெற்ற பிறகு மக்கள் பிரச்னைகள் பற்றி கவலைப்படவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் வாக்களித்த மக்களுக்கு நன்றி கூட சொல்லவில்லை’’ என காட்டமாக பேசினார்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal