அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு வேட்பாளர் பணம் கொடுக்க முயன்றார்.

உடனடியாக சுதாரித்த எடப்பாடி பழனிசாமி, சிரிது நேரம் கழித்து ‘‘யார் உன்னை பணத்தை எடுக்கச் சொன்னது. நீ விளையாட்டுத்தனமாக இருக்காதே… உன்னுடைய பாக்கெட்டில் பணமே இருக்கக்கூடாது’ என அ.தி.மு.க. வேட்பாளரை கடுமையாக கண்டித்தார்.

இந்த நிலையில்தான் ராமநாதபுரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பெண்களுக்கு பணம் கொடுத்ததாக வெளியான வீடியோவையடுத்து தேர்தல் ஆணையம் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

அதிகார மோதல் காரணமாக பல பிளவுகளாக அதிமுக பிரிந்துள்ளது. இதன் காரணமாக ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அதிமுகவை மீட்க தொடர்ந்து சட்ட போராட்டத்தை ஓபிஎஸ் மேற்கொண்டார். ஆனால் பின்னடைவை மட்டுமே சந்தித்தார். இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த ஓ.பன்னீர் செல்வம், தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனையடுத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஓ.பன்னீர் செல்வம் தீவிரமாக இறங்கியுள்ளார்.

பாஜக கூட்டணி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டிய அவர், ஆலோசனை கூட்டத்திலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நேற்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க வந்த போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு (ரூ.1,500)ஓ,பன்னீர் செல்வம் பணம் கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஓபிஎஸ் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal