மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு தேதி நெருங்கி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க. பரமபத ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது.

இந்தியாவில் அதிக லோக்சபா தொகுதிகளை கொண்ட மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார் மற்றும் தமிழ்நாடு ஆகியவை ஏப்ரல் 19ம் தேதி தேர்தலை எதிர்கொள்கின்றன. இதில் உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்து அதிக லோக்சபா தொகுதிகளை கொண்ட மாநிலம் மகாராஷ்டிராதான்.

எனவே மத்தியில் ஆட்சியை கைப்பற நினைக்கும் பாஜக மகாராஷ்டிராவை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. ஆனால், இந்த முறை பாஜகவுக்கு இங்கு கட்டம் சரியில்லை என்று கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. சிவசேனாவை உடைத்து தற்போது முதலமைச்சராகியிருக்கும் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸை உடைத்து துணை முதலமைச்சராகியிருக்கும் அஜித் பவார் என இவர்கள் இருவரும்தான் இதற்கு காரணம். இவர்கள் இருவருக்குமே உத்தவ் தாக்ரே, சரத் பவார் போன்று மக்களிடையே பெரும் செல்வாக்கு இல்லாததால் தற்போது பாஜக திணறி வருகிறது.

அதற்கேற்றாற்போல, இந்தியா கூட்டணி கட்சிதான் அதிக இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகளும் கூறி வருகின்றன. எனவே இந்த கள நிலவரத்தை மாற்ற பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது. குறிப்பாக தேர்தல் பிரசாரத்தில் சரத் பவாரின் படங்கள் பயன்படுத்தப்பட்டன. இது நல்ல யுக்தியாக இருந்தாலும், சரத் பவார் தரப்பு நீதிமன்றத்தை அணுகி இதற்கு தடை வாங்கிவிட்டது. அதேபோல, மறுபுறம் உத்தவ் தாக்ரே அணியின் வேட்பாளருக்கு எதிராக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக தேசியவாத காங்கிரஸின் பாரம்பரிய தொகுதியான பாராமதி தொகுதியில் சரத்பவார் மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்து அஜித்பவார் மனைவி சுனேத்ரா போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது நேற்று சரத்பவார் அணியின் சார்பில் 5 வேட்பாளருக்கான பட்டியல் வெளியானது. அதன்படி சரத்பவாரின் சொந்த தொகுதியான பாராமதியில் அவரது மகள் சுப்ரியா சுலே மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். அஜித் பவார் முகாமில் இருந்து அணி மாறி வந்த நிலேஷ் லங்கே எம்எல்ஏ அங்குள்ள அகமதுநகர் தொகுதி வேட்பாளராகவும், அமோல் கோல்ஹே மீண்டும் ஷிரூர் தொகுதியிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

நாசிக் மாவட்டத்தில் உள்ள திண்டோரி தொகுதியில் பாஸ்கர் பாக்ரேவும், வார்தா தொகுதியில் அமர் காலேவும் நிறுத்தப்பட்டுள்ளனர். இதில் பாராமதியில் தொகுதியின் வேட்பாளராக சுப்ரியா சுலே அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அவருக்கு எதிராக அஜித் பவாரின் மனைவி சுனேத்ராவின் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மகாராஷ்டிரா அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்த போட்டி குடும்பத்திற்கான போட்டியில்லை என்றும், சித்தாந்தத்திற்கான போட்டி எனவும் சுனேத்ரா கூறியுள்ளார். மேலும், தனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியதற்காக பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். சரத் பவாருடன் அஜித் பவார் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்தார். ஆனால், பாஜவின் தூண்டுதலின் பேரில் அஜித் பவார் சில எம்எல்ஏக்களை தன்னுடன் சேர்த்துக்கொண்டு, தனக்குதான் தேசியவாத காங்கிரஸ் சொந்தம் என்று கட்சியை பிரித்துவிட்டார். இப்போது இவர் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal