நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆ.ராசாவின் வாகனத்தை சோதனையிடுவதில் மெத்தனமாக செயல்பட்ட பறக்கும் படை பெண் அதிகாரி கீதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

குன்னூர் – கேரளா இடையிலான இரு மாநில எல்லை வாகன சோதனைச் சாவடியில் கடந்த மார்ச் 25-ம் தேதி ஆ.ராசாவின் காரை மறித்து, அதிகாரி கீதா தலைமையிலான பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையை முறையாக செய்யவில்லை. மேலோட்டமாக செய்யப்பட்டது என புகார்கள் எழுந்தன.

அது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களிலும், தனியார் தொலைக் காட்சிகளிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பறக்கும் படை அதிகாரி கீதாவை, நீலகிரி தேர்தல் நடத்தும் அதிகாரி சஸ்பெண்ட் செய்துள்ளார்.

இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வாகன சோதனையில் அலட்சியமாக இருந்தது உறுதி செய்யப்பட்டு, அதிகாரி கீதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஒட்டுமொத்த பறக்கும் படை அலுவலர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.

செய்தி தொலைக்காட்சிகளில் வெளியான வீடியோ, வீடியோ கண்காணிப்பு குழுவின் வீடியோக்களை பார்க்கும்போது, அந்த சோதனை மேலோட்டமாக நடத்தப்பட்டதையே காட்டுகிறது. உடன் வந்த காரை சோதனையிடவில்லை. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal