நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கூடலூர், பந்தலூர் பகுதியில் அவர் ஆதரவு திரட்டினார். இன்று அவர் மேட்டுப்பாளையம் பகுதியில் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை புரட்சியை ஏற்படுத்தும் தேர்தலாக இந்த பாராளுமன்ற தேர்தல் அமையும். அத்துடன் வரலாற்றை மாற்றும் தேர்தலாகவும் இந்த தேர்தலானது இருக்க போகிறது.

தற்போது நீலகிரி எம்.பியாக இருக்க கூடிய ஆ.ராசா இந்த தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை. குறிப்பாக கூடலூர் பகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை.  பழங்குடியின கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கவில்லை. தண்ணீர் கூட கொடுக்காமல் அவர்களை வஞ்சித்துள்ளனர். நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் உள்ள மக்கள் அனைவரும் இருண்டகாலம் முடிந்து எப்போது நமக்கு பிரகாசமான காலம் வர போகிறது என ஏக்கத்தோடு காத்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு விடிவு காலம் பிறக்க போகிறது. மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் பா.ஜனதா தீர்வு காணும்.

பிரதமர் மோடி ஆட்சியின் வளர்ச்சியை நீலகிரி மக்களும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது. அங்கு தோல்வி பயத்தில் தி.மு.க., அ.தி.மு.க தான் அவருக்கு எதிராக அவரது பெயரை போன்றுள்ள 5 நபர்களை இறக்கியுள்ளனர். எத்தனை பேர் வந்தாலும் மக்களிடம் அவருக்கான  செல்வாக்கு உள்ளது. நிச்சயமாக அவர் பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை பெறுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal