பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். நேற்று காலை பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட கோணவாய்க்கால் பாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது தேர்தல் நடத்தை விதியை மீறியதாக கூறி பறக்கும்படை அதிகாரி தாமோதரதாஸ் என்பவர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில் தேர்தல் விதியை மீறி வேட்பாளர் வசந்தராஜன் உள்ளிட்டோர் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை திரட்டி ஊர்வலமாகச் சென்றனர்.
இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. அதன்பேரில் வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. அதன்பேரில் வேட்பாளர் வசந்தராஜன் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து பா.ஜ.க.வினர் கூறுகையில், அனுமதி குறித்து ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சர்வர் பிரச்சனை காரணமாக அனுமதி இன்னும் கையில் கிடைக்கப் பெறவில்லை என்று தெரிவித்தனர். ஆயினும் போலீசார் பா.ஜ.க. வேட்பாளர் வசந்தராஜன் மீது வழக்கு தொடர்ந்தனர்.