தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இன்று வேட்பு மனு மீதான பரிசீலனை நிறைவு பெற்றது. இந்நிலையில், தேர்தல் பிரசாரத்திற்கான பணிகள் அனல் பறக்கத் தொடங்கியுள்ளன. மாநிலம் முழுவதும் அதிமுக, திமுக, பாஜக,  நாம் தமிழர் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வேட்பாளர் அறிமுக கூட்டங்களை நடத்தி வருகின்றனர். 

அந்த வரிசையில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் பாமக வேட்பாளர் திலகபாமாவின் அறிமுக கூட்டம் திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக கிழக்கு, மேற்கு மாவட்ட தலைவர்கள் தனபாலன், கனகராஜ், பாமக மாவட்ட செயலாளர் ஜான் கென்னடி,   த.மா.க., நிர்வாகி ராமதாஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.  

இக்கூட்டத்தில் பேசிய பாமக வேட்பாளர் திலகபாமா: தேசிய ஜனநாயக கூட்டணி நீயா? நானா? என போட்டி போடும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி போன்றது அல்ல. உங்களுக்காக நானும், எனக்காக நீங்களும் மனப்பூர்வமாக வாக்களிக்களிவும், வாக்கு சேகரிக்கவும் ஒன்றிணைந்த கூட்டணி. இதற்கு காரணம் நாம் அனைவரும் பிரதமர் மோடி என்ற ஒற்றைப் புள்ளியில் ஒன்றிணைகிறோம்.  பிரதமர் மோடியின் முகமாக, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணியின் முகமாக பாருங்கள் என்றார். 

தொடர்ந்து பேசியவர், கடந்த தேர்தலில் திமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பது, வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது என அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டனர். எனவே இந்த  முறை நாம் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். நமது தலைமுறையை சரியாக வழிநடத்த வேண்டும் என்றால் திமுக போன்ற கட்சிகளை அதிகாரத்தில் அமரவைக்கக்கூடாது. அப்படி அவர்கள் அதிகாரத்தில் அமர்ந்தால் நமது பிள்ளைகளுக்கு தவறான முன்னூதாரணம் ஆகிவிடும் என்றார். 

மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஓட்டிற்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். அதேபோல், நாம் ஓட்டிற்கு பணம் கொடுப்பது வேட்பாளர்களால் மக்கள் ஏமாறுவது மட்டும் அல்ல, மக்களால் வேட்பாளர்களும் ஏமாந்து விடுவதற்கு சமமானது.  எனவே, ஓட்டை நேர்மையாக பதிவிடுவோம். மத்தியில் தாமரை மலரும், திண்டுக்கல்லில் மாங்கனி வெற்றி பெறும் என உறுதியுடன் தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal