திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த செங்குணம் கொள்ளை மேடு பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. சுமார் ஐந்து தலைமுறைகளுக்கு மேல் வசித்து வரும் பழமை வாய்ந்த கிராமம் ஆகும்.
போளூர் அடுத்த செங்குணம் கொள்ளை மேடு கிராமத்தில் சுமார் 700 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர் இந்நிலையில் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த நிலையிலும் சுமார் நான்கு,ஐந்து கிலோ மீட்டர் கடந்து அருகில் உள்ள செங்குணம் கிராமத்திற்கு நடந்து சென்று வாக்களிக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் மேலும் முதியோர்கள், கர்ப்பிணிகள், உடல்நிலை சரியில்லாமல் உள்ளவர்கள் உள்ளிட்டோர் 4,5 கிலோ மீட்டர் நடந்து சென்று வாக்களிக்க சிரமமாக உள்ளது எனவும் நாங்கள் பலமுறை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தங்கள் கிராமத்திற்கு இம்முறை வாக்குச்சாவடி மையம் அமைக்காவிட்டால் தங்கள் ஒட்டுமொத்த கிராமமே அதாவது 700 வாக்காளர்கள் கொண்ட அனைவருமே வாக்களிக்க போவதில்லை என கூறி எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி சுமார் நான்கு நாட்களாக போராட்டம் செய்து வருகின்றனர்.
மேலும் தமிழக அரசே நாங்கள் உங்கள் அடிமைகள் அல்ல உள்ளிட்ட பல்வேறு வாசகப் பதாகைகளை எழுதிவைத்து கிராமமே போராட்டத்தில் ஈடுபட்டு வருவது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எங்கள் பகுதியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கிராம மக்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.