சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கௌதமபுரம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வளாகத்தில் வீடு, வீடாக சென்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு வாக்கு சேகரித்தார். அப்போது திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் இருந்தனர். வாக்கு சேகரிப்பின்போது அமைச்சர் சேகர்பாபு, செய்தியாளர்களிடம் கூறியதாவது; தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்பதை உணர்ந்து தோல்விக்கு காரணம் கூற அவதூறுகளை அள்ளி வீசுகிறார் ஜெயக்குமார்.
தினமும் மைக் முன்னர் பேச வேண்டும் என நினைக்கும் அவருக்கு மைக் மேனியா உள்ளது. ஜெயக்குமார் தற்போதும் தான் அமைச்சராக இருப்பதுபோல நினைத்துக்கொண்டுஅதிகார தோரணையில் அதிகாரிகளை மிரட்டுகிறார். சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு திமுக தொடர்ந்து பணிகளை மேற்கொள்ளும். இது போன்ற சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சமாட்டோம். திமுக விதிமீறல்களில் ஈடுபடவில்லை.
இவ்வாறு கூறினார்.