தேர்தலில் வெற்றி பெற்றால், விருதுநகரில் குடியேறி மக்களுக்கு சேவை செய்வேன், என அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளரான விஜய பிரபாகரன், நேற்று திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது தந்தையின் பெயரும் புகழும் எங்களுக்கு நிச்சயம் வெற்றியை தேடித் தரும்.
பாஜக வேட்பாளர் ராதிகா-வின் மகளும், நானும் ஒன்றாக படித்தோம். அதனால் அவர் என்னை மகன் என்று கூறியுள்ளார். அதேபோல், சரத் குமாரும் எனது தந்தையும் ஒன்றாக நடித்துள்ளனர்.
சினிமா நட்பு என்பது வேறு, அரசியல் என்பது வேறு. சென்னையிலிருந்து விமானத்தில் மதுரைக்கு ஒரு மணி நேரத்தில் வந்துவிடலாம் என்பதால், மக்களை அடிக்கடி சந்திப்பேன்.
மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், உடனடியாக சென்று அதை தீர்க்க வேண்டும் என எனது தந்தை கற்றுத் தந்துள்ளார். எனவே என்னை வெற்றி பெறச் செய்தால், விருதுநகரில் குடியேறி மக்களுக்கு சேவை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.