பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே 4 தடவை வந்து பிரசாரம் செய்துள்ளார். சென்னை, பல்லடம், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி நகரங்களில் அவரது பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வர உள்ளார். தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் தேர்தல் பிரசாரம் மேலும் தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும் சுற்றுப்பயணத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இறுதி  வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு தலைவர்கள் பிரசாரத்துக்கு 17 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. அந்த காலக்கட்டத்தில் பிரதமர் மோடி 3 தடவை வர வாய்ப்பு இருப்பதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் தற்போது பிரதமர் மோடி தமிழகத்துக்கு ஒரு தடவை வர மட்டுமே வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. அப்போது அவர் 3 மாவட்டங்களில் பிரசாரம் செய்வார் என்று கூறப்படுகிறது.

கரூர், விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய 3 நகரங்களுக்கு பிரதமர் மோடி செல்லக்கூடும் என்று தெரியவந்துள்ளது. அநேகமாக பிரதமர் மோடி அடுத்த வாரம் தமிழகம் வருவார் என்று தெரிகிறது. ஆனால் உத்தரபிரதேசத்திலும் அவர் 30-ந்தேதி முதல் பிரசாரம் செய்ய உள்ளார். அதற்கேற்ப அவரது தமிழக சுற்றுப் பயணம் அமையும். வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் ஏப்ரல் 2-வது வாரமும் பிரதமர் மோடி தமிழகத்துக்கு மீண்டும் வருவார் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal