பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பிரசாரங்களும் களைகட்டி வருகிறது. 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மீதமுள்ள ஒரு தொகுதி தேனி ஆகும். இந்த தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டார்.

2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரசின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். இந்நிலையில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்செல்வனும், அதிமுக சார்பில் நாராயணசாமியும், அமமுக சார்பில் டிடிவி தினகரனும், நாம் தமிழர் சார்பில் மதன் ஜெயபாலும் வேட்பாளர்களாக களம் இறங்குகிறார்கள். இதை தொடர்ந்து இந்த முறையும் தேனி தொகுதியில் போட்டி கடுமையானதாக இருக்கும் என்பது கட்சியினர் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மதுரை அலங்காநல்லூரில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தி.முக. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது, திமுக பாராளுமன்ற தேர்தலில் தேனி மாவட்ட திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற வேண்டும் என்றும், அதிகப்படியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை என்றால் தனது பதவியை அடுத்த நாளே ராஜினாமா செய்கிறேன் என்று கூறினார். நிர்வாகிகள் கூட்டத்தில் வெளியில் இருந்து பெண்களை அழைத்து வந்ததை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர் மூர்த்தி செல்போனில் அரசியல் தேவையில்லை என்றும், மக்களை நேரில் சந்தியுங்கள் என்றும், செல்போனில் அரசியல் செய்தால் எப்படி உருப்படும் என்றும், பொய்  சொல்வதை முதலில் நிறுத்துங்கள் என்றும் நிர்வாகிகளை கடிந்து கொண்டார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal